கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த நவீன் குமார் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த சுரேஷ் ஆச்சார்யா, அண்மையில் வீட்டை காலி செய்துள்ளார். வீட்டின் சுவர்கள் மற்றும் குழாய்கள் சேதமடைந்திருந்ததால், பழுதுபார்ப்புச் செலவு மற்றும் நிலுவை வாடகையைக் கழித்துவிட்டு மீதி முன்பணத்தைத் தருவதாக வீட்டு உரிமையாளர் நவீன் கூறியுள்ளார். இதற்கு உடன்படாத சுரேஷ், தான் செலுத்திய ரூ.20,000 முன்பணத்தையும் முழுமையாகத் திருப்பித் தர வேண்டும் எனக் கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், அக்டோபர் 28 அன்று நவீன் தனது கடையில் இருந்தபோது அங்கு வந்த சுரேஷ், மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவர், தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை நவீன் மீது வீசி, கத்தியாலும் தாக்க முயன்றார். இத்தாக்குதலில் நவீனின் முகம், கைகள், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட நவீன் அளித்த புகாரின்பேரில், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உடுப்பி நகரக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
