தமிழக அரசியல் களத்தில் நடிகர் தனுஷின் அடுத்தகட்ட நகர்வுகள், புதிய புயலை கிளப்பியிருக்கின்றன. அவர் நேரடி அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகக் கருதப்படும் சூழலில், திமுக உடனடி ‘அலர்ட் மோடுக்கு’ மாறியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கட்சியின் தூணாகத் திகழும் இளைஞரணியை மேலும் வலுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளில் உதயநிதி ஸ்டாலின் இறங்கியுள்ளதாக அண்ணா அறிவாலய வட்டாரங்களில் பேச்சுக்கள் பலமாக அடிபடுகின்றன.
கடந்த சில மாதங்களாகவே நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, நற்பணி இயக்க கட்டமைப்பை மாநிலம் முழுவதும் முடுக்கிவிட்டு வருகிறார். தன் பிறந்தநாளில் ஏழை மக்களுக்கு ஆட்டோக்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது முதல், சமீபத்தில் டெல்லிக்கு சென்று பல்வேறு அரசியல் முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தியது வரை அவரது நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் தவெக உள்ளிட்ட மாற்று முகாம்கள் கொந்தளிப்படைந்துள்ளதுடன், அவரது இந்த நகர்வுகளை கூர்ந்து கவனிக்கத் தொடங்கியுள்ளன.
டெல்லி பயணத்திற்குப் பிறகு தனுஷ் மீது சில எதிர்மறையான விமர்சனங்களும், அவர் மகளிர் வாக்குகளை கவர முடியாது என்ற கணிப்புகளும் முன்வைக்கப்பட்டன. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை திரும்பிய தனுஷ் உடனடியாக மகளிரணி நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டி, அவர்களுக்கு வெள்ளி குத்துவிளக்குகளை பரிசளித்து அசத்தினார். இந்தச் சந்திப்பின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, மகளிர் மத்தியில் அவரது செல்வாக்கை வெளிப்படுத்தியதுடன், 2031 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வரும் உள்ளாட்சித் தேர்தலிலேயே அவரது ஆதரவாளர்கள் களமிறங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பையும் உயர்த்தியுள்ளது.
தனுஷிற்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் கணிசமான ஆதரவு இருப்பதால், அவரது களமிறங்கள் திமுக தரப்பை சற்றே யோசிக்க வைத்துள்ளது. இளைய தலைமுறையின் வாக்குகள் சிதறினால் அது தவெகவுக்கும் பின்னடைவாக அமைவதோடு, திமுகவின் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே, திமுக இப்போதே நிலைமையை உணர்ந்து, இளைஞர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பாதவாறு தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகையின்போது கடைசி நேரத்தில் விழித்துக் கொள்வதைப் போல இல்லாமல், தொடக்கத்திலேயே இந்த சவாலை சரிசெய்ய வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது. இதன் விளைவாகவே, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியை கிராமப்புற அளவிலும் பலப்படுத்தி, புதிய வாக்காளர்களைக் கவரும் திட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. தனுஷின் அரசியல் வருகையால் பெரிய பாதிப்பு இல்லை என்றபோதிலும், ஒரு சிறு வாக்குக் கூட கைநழுவி விடக்கூடாது என்பதில் ஆளுங்கட்சி காட்டும் இந்த துரித வேகம் தமிழக அரசியலில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
