திமுக மகளிரணியை இரண்டாகப் பிரித்து, இளம்பெண்களை அதிக அளவில் கட்சிக்குள் இணைக்கும் வகையில் அமைப்பை மறுசீரமைக்கக் கட்சித் தலைமை தீவிரமாகப் பரிசீலித்து வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் இயங்கி வரும் திமுக மகளிரணியை வலுப்படுத்தவும், இளம் பெண் வாக்காளர்களை அதிகளவில் ஈர்க்கவும் இந்த அதிரடித் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதன்படி, மகளிரணியைப் புதுப்பித்து இளம்பெண்களுக்கெனத் தனியாகப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுச் சீரமைப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அதேவேளையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் இளைஞரணியைத் தவிர்த்து, கட்சியின் மாணவரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளிலும் பல்வேறு புதிய முகங்களை இணைத்து மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தலைமை உத்தரவிட்டுள்ளது. வரும் பொதுத்தேர்தல்களை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவை முழுமையாகத் தக்கவைத்துக் கொள்ளவே திமுக இந்த உள்கட்சி மாற்றங்களை அதிவேகமாக மேற்கொண்டு வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
