தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தீவிரமடைந்து வரும் கனமழை காரணமாக, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக்டோபர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கும், குமரி மாவட்டத்தில் கலெக்டர் பிரதாப்பும் விடுமுறையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கெனவே நெல்லை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவமழை தீவிரம் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு வானிலை மையம் இன்று ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அடுத்த சில மணி நேரங்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அவசியமின்றி வெளியே வருவதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளதோடு, பேரிடர் மீட்புக் குழுவினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
