சென்னையில் ‘ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்ற பெயரில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமான நிதி சார்ந்த சமூக வலைதளப் பக்கங்களை நடத்தி வந்த வி.ஹரிஷ் (27) என்பவர், இணையவழித் துஷ்பிரயோகம் மற்றும் மிரட்டல்கள் காரணமாக தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் 13 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்களைக் கொண்டுள்ள ஹரிஷ், தான் இறப்பதற்கு முன் வெளியிட்டதாகக் கூறப்படும் கடைசி வீடியோவில், தனது 5 வருட உழைப்புத் திருடப்பட்டுவிட்டதாகவும், தன்னைத் தொடர்ந்து மிரட்டிப் பணம் பறித்ததுடன் குடும்பத்தினரையும் குறிவைப்பதாகத் தெரிவித்திருந்தார்.
முறையான உரிமம் பெறவில்லை எனத் தொழில்நுட்ப நிறுவனமான ஜெமுரியா இன்க் சிஇஓ ஜேசன் சாமுவேல் தனது கணக்குகளுக்கு எதிராகப் புகாரளித்து அழுத்தம் கொடுத்ததே ஹரிஷின் இந்த விபரீத முடிவிற்குக் காரணம் எனத் தந்தை குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஜேசன் சாமுவேல் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்தச் சம்பவம் ஆன்லைன் பிரபலங்கள் மற்றும் நிதி இன்ஃப்ளூயன்சர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
