மும்பையில் பிரம்மாண்ட கட்டட கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பலத்த உயரத்தில் வேலை செய்த தொழிலாளி ஒருவர் சமநிலை தவறிப் பாதுகாப்பு வலை மீது விழுந்ததும், சக ஊழியர் உடனடியாக அவரை மீட்க முயன்றதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கட்டடத்தின் பல மாடிகளுக்கு உயரத்தில் பாதுகாப்பிற்காகக் கட்டப்பட்டிருந்த வலை மீது தொழிலாளி ஒருவர் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்தப் பாதுகாப்பு வலையில் அவர் சிக்கிக்கொண்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. உடனடியாக சக தொழிலாளி கயிற்றைப் பயன்படுத்தி அவரை மேலே இழுத்து மீட்க முயலும் காட்சிகள் இணையத்தில் பலரையும் பதைபதைக்க வைத்துள்ளதுடன், கட்டுமானப் பணிகளில் பாதுகாப்பு முறைகள் எந்தளவுக்கு முக்கியம் என்பது குறித்து நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
