உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், மேம்பாலத்தில் நின்று புகைப்படம் எடுக்க முயன்றபோது நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விந்தியாச்சல் கோயிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு காசி நோக்கி ஸ்கார்பியோ காரில் திரும்பிய ஏழு நண்பர்கள், வழியில் இருந்த மேம்பாலத்தின் ஓரமாக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். பின்னர் அனைவரும் கீழே இறங்கி, பாலத்தின் தடுப்புச் சுவரோரம் நின்றபடி உற்சாகமாக செல்ஃபி எடுக்கத் தொடங்கினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக, அதே பாதையில் அசுர வேகத்தில் வந்த ஒரு சரக்கு லாரி, நிலைதடுமாறி அவர்கள் மீதும் காரின் மீதும் பலமாக மோதியது. இந்த பயங்கர மோதலில் நால்வர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில், மற்ற மூவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகப் போக்குவரத்து உள்ள மேம்பாலத்தில் அஜாக்கிரதையாக காரை நிறுத்தி செல்ஃபி எடுக்க முயன்றது பெரும் சோகத்தில் முடிந்துள்ளது.
