நாகப்பட்டினம் அருகே ரூ.270 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தவெக முன்னாள் நிர்வாகி பூபாலன் உட்பட நான்கு பேர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 30 ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது விவகாரத்தில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் விசாரணையில் வெளிவந்துள்ளன. வட மாநிலங்களில் இருந்து போதைப்பொருளுக்கான மூலப்பொருட்களைக் கொண்டுவந்து, அதனைத் தமிழகத்திலேயே தயாரித்து நாகை உள்ளிட்ட சில மாவட்டங்கள் வழியாக இலங்கைக்குக் கடத்தியது அம்பலமாகியுள்ளது.
இவ்வாறு இலங்கைக்குக் கடத்தப்படும் போதைப்பொருட்கள் அங்கிருந்து ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில், போதைப்பொருள் கடத்தலுக்குப் பின்னணியில் உள்ள மேலும் பல முக்கியப் புள்ளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
