குஜராத் மாநிலம் அகமதாபாத் அமிரைவாடி பகுதியில் 15 வயது சிறுவன் ஒருவன் பக்கத்து வீட்டுக்காரரால் கத்தி முனையில் மிரட்டிப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ நிலையம் அருகில் உள்ள பொது ஜிம் மற்றும் கட்டிடத்தின் மாடிப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனை, அந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்டித் தொடர்ச்சியாக இருமுறை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கும் பயத்திற்கும் ஆளான சிறுவன், பின்னர் தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளான். பெற்றோரின் புகாரின் பேரில் அமிரைவாடி காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பற்ற சூழல் குறித்து சமூக வலைதளங்களில் மீண்டும் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.
