தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வி. அர்லேகரைச் சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். முன்னதாக தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநராக இருந்த ஆர்.வி. அர்லேகர் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராகக் கூடுதல் கவனித்து வந்தார். கடந்த ஆறு மாதங்களாக முழுநேர ஆளுநர் இன்றி இருந்த தமிழகத்திற்கு, தற்போது அவர் முழுநேர ஆளுநராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவரும், கோவாவில் பாஜக அமைச்சராகவும், சட்டமன்ற சபாநாயகராகவும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில ஆளுநராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் அர்லேகர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றபோதிலும் பெரும்பான்மை நிரூபிப்பதில் ஏற்பட்ட சில நடைமுறைச் சிக்கல்களால், உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்காமல் அவர் சில காலம்தாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது ஆளுநரின் இந்தச் செயல்பாடுகளுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்த போதிலும், பின்னர் பெரும்பான்மை உறுதிப்படுத்தப்பட்டதும் முதல்வர் விஜய்க்கு அவர்தான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு, “தமிழ்நாட்டின் வளர்ச்சி, மாநில உரிமைகள் மற்றும் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்” என்று முதல்வர் விஜய் ஏற்கனவே தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது மாநிலத்தின் நலன் சார்ந்த முக்கிய விவகாரங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
