வட தில்லி அசோக் பார்க் மெட்ரோ நிலையம் அருகே உள்ள டான்ஸ் கிளப் ஒன்றில் ரகுபீர் நகரைச் சேர்ந்த ஓட்டுநரான தல்ஜீத் (29) என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மேனேஜரின் மனைவி மீது பீர் சிந்தியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு தல்ஜீத் மற்றும் அவரது நண்பர்கள் மன்னிப்பு கேட்டபோதிலும், கிளப் மேனேஜர் மற்றும் பவுன்சர்கள் மரத்தடிகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களால் அவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
மேலும், அவர்களைத் தண்ணீரில் மூழ்கடித்து முகம் மற்றும் தாடைப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்படுத்தியுள்ளனர். படுகாயமடைந்த தல்ஜீத் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 8 வயது மகனின் ஒரே ஆதரவாகவும், குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாகவும் இருந்த தல்ஜீத்தின் இந்த மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கிளப் மேனேஜர், அவரது மனைவி மற்றும் 3 பவுன்சர்கள் உட்பட 5 பேரைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
