தெலங்கானா மாநிலம் காச்சிகுடா ரயில் நிலையத்தில், நின்றுகொண்டிருந்த விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படத் தொடங்கிய நிலையில், பயணி ஒருவர் கையில் தனது மகனுடன் அதில் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால்கள் இடறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டது.
இதைக் கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலர் ரீனா குமாரி எந்தவித யோசனையும் இன்றி நொடிப் பொழுதில் ஓடிவந்து அந்த நபரைப் பிடித்துப் பாதுகாப்பாக இழுத்து மீட்டார். காவலரின் இந்தத் துரிதச் செயல்பாட்டாலும் சாதுரியத்தாலும் தந்தை மற்றும் குழந்தை பெரும் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த நிகழ்வின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, ஆர்.பி.எஃப் காவலர் ரீனா குமாரியின் வீரத்தையும் துணிச்சலையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
