தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி சார்பில் டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கி நடத்த திட்டமிடப்பட்ட பிரம்மாண்டப் போராட்டப் பேரணியில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை அம்மாநிலக் காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. ஷியோபூர், மொரேனா மற்றும் பிந்த் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அவர்களின் வீடுகள், அலுவலகங்களை நள்ளிரவில் சுற்றி வளைத்த போலீசார், அவர்களைத் தடுப்புக் காவலில் எடுத்தனர்.
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி, “பிரதமர் மோடி மட்டுமல்ல, முதல்வர் மோகன் யாதவ் அரசும் அதிகாரத்தைப் பார்த்துப் பயந்துவிட்டது; ஜனநாயக உரிமைகளைப் பறித்து தேர்தல் ஆணையருக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது” என ஆவேசமாகக் குற்றம்சாட்டியுள்ளார். அமைதியான முறையில் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற தலைவர்களைக் கைது செய்ததற்கு நாடு முழுவதும் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
