உத்தரபிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பீட்டா-1 குடியிருப்பு பகுதியில், கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி இரவு நேரத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை ஒன்றை அழைத்துக்கொண்டு வந்த நபர் ஒருவர், குடியிருப்புச் சுவரோரம் மறைவாகக் குப்பையைக் கொட்டிவிட்டுச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் இதைக் கண்காணித்த குடியிருப்பு நலச்சங்கம், உடனடியாகப் பொது அறிவிப்பு அமைப்பு மூலம் மைக்கில், “தம்பி, ஏன் குப்பை கொட்டுறீங்க? அதை எடுங்க!” என்று எச்சரித்துள்ளது. திடீரென வந்த குரலைக் கேட்டு அதிர்ந்துபோய் சுற்றுமுற்றும் பார்த்த அந்த நபர், காலையில் அபராதம் விதிக்கப்படும் என்ற பயத்தில் வேறு வழியின்றித் தான் கொட்டிய குப்பையைத் தானே அள்ளிச் சென்றுள்ளார். இந்த விநோதமான மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது.
