சென்னை பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு, மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நொச்சிக்குப்பம், சீனிவாசபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் தங்களது பல தலைமுறை வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு இந்த ஆடம்பரத் திட்டம் தேவையா என்று தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மறுபுறம், திமுக, அதிமுக, அமமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் என ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து, அரசின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த இடத்தைத் தேர்வு செய்ததற்குப் பின்னால் ஜோதிட நம்பிக்கை இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. முதல்வரின் தனிப்பட்ட ஜோதிட ஆலோசகர் ‘கடக ராசிக்கு நண்டு போல நீர்நிலையை ஒட்டிய பகுதிதான் பலம்’ என்று கூறியதாகவும், முதல்வரின் அறை கடலோரப் பகுதியில் அலைகளைப் பார்த்தபடி கிழக்கு முகமாக அமைந்தால் மட்டுமே நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியும் என்று அறிவுறுத்தியதாகவும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவுகின்றன. இதனால் சிந்தாதிரிப்பேட்டை, எழிலகம், கிண்டி ரேஸ் கோர்ஸ் போன்ற பல மாற்று அரசு நிலங்கள் நிராகரிக்கப்பட்டு பட்டினப்பாக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அறிவியல் யுகத்தில் ஆட்சி நடத்த வந்தவர்கள், வெறும் ஜோதிடப் பலனுக்காகவும் நீண்ட காலம் நாற்காலியில் நீடிக்க வேண்டும் என்ற சுயநலத்திற்காகவும் மீனவர்களின் வயிற்றிலடிப்பது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கொதித்துப் போயுள்ளனர். “நாங்கள் கடலையே நம்பி வாழ்கிறோம்; முதலமைச்சரின் நாற்காலி தப்பாமல் இருக்க எங்கள் வாழ்க்கையை அழிப்பதா?” என்று லூப் சாலையில் மீன் விற்றுப் பிழைக்கும் மீனவப் பெண்கள் எழுப்பும் கேள்விகள் அரசின் மனசாட்சியை உலுக்குவதாக உள்ளன. மக்கள் நலனைப் புறக்கணித்துவிட்டு மூடநம்பிக்கையின் அடிப்படையில் முடிவெடுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்ற கருத்து பலமாக எழுந்துள்ளது.
தற்போது முதல்வர் விஜய் கடுமையான இரட்டை நெருக்கடியைச் சந்தித்து வருகிறார். மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி பட்டினப்பாக்கம் திட்டத்தைக் கைவிட்டால் ஜோதிட யோகம் கைநழுவிப் போய்விடுமோ என்ற பயம் ஒருபுறமும், எதிர்ப்பை மீறித் தொடர்ந்தால் “ஜோதிடத்தை நம்பி மீனவர்களை விரட்டியடித்தவர்” என்ற கெட்டப்பெயரோடு மிகப்பெரிய அரசியல் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சம் மறுபுறமும் அவரைத் தயங்க வைக்கிறது. மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாற்று இடத்திற்கு அரசு மாறுமா அல்லது ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
