ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவன் ஒருவன், பெண் தோழியின் வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தது கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், மாணவனின் மரணத்தில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இதையடுத்து, மாணவனின் குடும்பத்தினரும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பெண்ணின் வீட்டை அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு சூறையாடியதோடு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீதும் கற்களை வீசித் தாக்கினர்.
இந்தத் தாக்குதலில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். பதற்றமான சூழலைக் கட்டுக்குள் கொண்டுவரக் காவல் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணையும் நடந்து வருகிறது.
