பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் BA295 என்ற போயிங் 777 ரக விமானம், அக்டோபர் 5, 2026 அன்று லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் சிகாகோ நகரை நோக்கிப் புறப்பட்டது. பயணிகள் அனைவரும் அமைதியாகப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், அயர்லாந்து வான்பரப்பில் சுமார் 37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தில் திடீரென எதிர்பார்க்காத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் சில நிமிடங்களிலேயே விமானம் ஆயிரக்கணக்கான அடிகள் வேகமாகக் கீழிறங்கி, 9,000 அடி உயரத்திற்கு வந்ததால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது.
விமானத்தின் காற்றழுத்தக் கட்டுப்பாட்டு அமைப்பில் (Cabin Pressurization) ஏற்பட்ட கோளாறே இந்தத் திடீர் இறக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. 30,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் காற்றில் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும் என்பதால், கேபினில் அழுத்தக் குறைவு ஏற்பட்டதும் பயணிகளுக்கான ஆக்சிஜன் முகமூடிகள் (Oxygen Masks) தானாகவே கீழே தொங்கின. இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த விமானிகள், உடனடியாகச் செயல்பட்டு ‘Squawk 7700’ எனும் சர்வதேச அவசரநிலைக் குறியீட்டை அனுப்பி வான்வழித் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
உயர் வான்பரப்பில் ஆக்சிஜன் குறைபாட்டால் பயணிகளுக்கு ஆபத்து நேராமல் இருக்கவே, சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் அடர்த்தி கொண்ட 9,000 அடி உயரத்திற்கு விமானிகள் உடனடியாக விமானத்தைக் கொண்டு வந்தனர். நிலமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காகப் பயணத்தைத் தொடர்ந்து சிகாகோ நோக்கிச் செல்லாமல், மீண்டும் லண்டனுக்கே திரும்பிச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
தரையிறங்குவதற்கு முன்பாக, விமானத்தின் அதிகப்படியான எடையைக் குறைத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வான்பரப்பில் சில சுற்றுகள் சுற்றி எரிபொருள் குறைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, விமானிகளின் திறமையான மற்றும் விரைவான நடவடிக்கையால் அந்த விமானம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எந்தவிதக் காயமுமின்றி ஆபத்தின்றித் தப்பினர்.
