“ஒத்த ரூபா கூட தரல… துணிச்சல் இருந்தா நிரூபிங்க”…. எதிர்க்கட்சிகளுக்கு சவால் விட்ட தவெக மரகதம் குமரவேல்….!

By Nanthini on ஐப்பசி 6, 2026

Spread the love

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேல் எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அதிரடி சவால் விடுத்துள்ளார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் , திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட்கள் என ஐந்து முனைப் போட்டி நிலவும் இத்தேர்தலில், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வான மரகதம் குமரவேல் தற்போது தவெக வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

மதுராந்தகத்தில் தவெக தரப்பில் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள், டோக்கன்கள் மற்றும் பணம் விநியோகிக்கப்படுவதாகப் பரவலாகச் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை மரகதம் குமரவேல் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓட்டுக்காக நாங்கள் ஒத்த ரூபாய் கூடக் கொடுக்கவில்லை; நாங்கள் பணம் கொடுத்தோம் என்பதை எதிர்க் கட்சியினரால் நிரூபித்துக் காட்ட முடியுமா?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார். ஊழலற்ற மற்றும் தூய்மையான ஆட்சியைத் தருவதே தவெகவின் முதன்மைக் கொள்கையாக இருக்கும்போது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பார்கள் என்று கூறுவது அடியோடு தவறானது என அவர் சுட்டிக்காட்டினார்.

   

தம் மீதான விமர்சனங்கள் மற்றும் அதிமுக பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து விளக்கிய அவர், தலைமையின் முடிவுகள் மற்றும் கட்சியின் கொள்க முரண்பாடுகள் காரணமாகவே வெளியேறியதாகக் குறிப்பிட்டார். தவெகவில் எந்தவிதக் குதிரைப் பேரமும் நடைபெறவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். “தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை ஓட்டுக்குப் பணம் தராமலேயே பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது; மதுராந்தகத்திலும் கடந்த தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது” என்று சுட்டிக்காட்டிய அவர், எதிர்க் கட்சியினர் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இத்தகைய பொய்ப் பிரசாரங்களைப் பரப்பி வருகிறார்கள் என்றார்.

   

தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களிடையே தவெக மீது எந்தக் குறையோ விமர்சனமோ இல்லை என்றும், எதிர்க் கட்சியினரே திட்டமிட்டுக் குதிரைப் பேரம் என்ற கட்டுக்கதையைத் திணித்து வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார். தூய்மையான அரசியல் பாதையில் பயணிக்கும் தவெகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளதைக் சகித்துக் கொள்ள முடியாமல் இத்தகைய பொய்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக அவர் சாடினார்.

 

மதுராந்தகம் தொகுதி மக்களுக்குத் தன்னைப் பற்றியும், தனது நேர்மையான களப்பணியைப் பற்றியும் முழுமையாகத் தெரியும் என்றும், வாக்காளர்கள் 100 சதவீதம் தவெகவின் தூய்மையான அரசியலுக்கு ஆதரவளித்து வாக்களிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூடக் கொடுக்காமல் நேர்மையான வழியில் நின்று தேர்தலைச் சந்திப்பதாகக் கூறிய மரகதம் குமரவேல், பொய் குற்றச்சாட்டுகளை வீசுவதை விட்டுவிட்டு அதை நிரூபித்துக் காட்டுமாறு எதிர்க் கட்சிகளுக்கு மீண்டும் பகிரங்க சவால் விடுத்தார்.