மதிமுகவின் முக்கிய நட்சத்திர பேச்சாளராகத் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கி, அடுக்குமொழிச் சொல்லாட்சியாலும் தமிழ் வீச்சினாலும் மேடைகளில் கைத்தட்டல்களை அள்ளியவர் நாஞ்சில் சம்பத். ‘எல்.கே.ஜி’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துத் தன் திறமையை வெளிப்படுத்திய இவர், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் காலத்தில் அதிமுகவில் இணைந்தார். அப்போது அவரது பிரச்சாரப் பணிகளைப் பாராட்டி அதிமுக சார்பில் அவருக்கு சொகுசு கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சில ஆண்டுகள் அரசியலிலிருந்து விலகி அமைதி காத்து வந்தார்.
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, மீண்டும் தீவிர அரசியலுக்குள் நுழைந்தார் நாஞ்சில் சம்பத். அவருக்குக் கட்சியில் பரப்புரைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தவெகவின் பல்வேறு பொதுக்கூட்ட மேடைகளில் பங்கேற்று, வழக்கமான தன் உணர்ச்சிமிக்கப் பேச்சால் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. “போனால் போகட்டும் போடா.. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா.. என்னுடைய பகலை எவரும் இருட்டாக்க முடியாது.. என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது.. என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தத்துவார்த்தமான பதிவு, தவெக தலைமையின் மீது அவர் அதிருப்தியில் இருப்பதை உணர்த்துவதாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வேகமாகப் பரவின.
மேலும், நடிகர் தனுஷின் ரசிகர் மன்ற அமைப்பில் அவர் இணைந்துவிட்டதாகக் கூறி ஒரு புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இதனால் எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாஞ்சில் சம்பத் தற்போது விளக்கமளித்துள்ளார். “அதுபோன்ற முட்டாள்தனமான காரியத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்; நான் இன்னமும் தவெகவில்தான் நீடிக்கிறேன்” என்று தெளிவாகக் கூறி, கட்சி மாறப்போவதாக வந்த வதந்திக அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
