சோஷியல் மீடியாவில் ஆடம்பர வாழ்க்கையை காட்டி பிரபலமான யூடியூபர் நாகர்கோவில் மதுமிதாவை சுற்றி தொடர்ந்து சர்ச்சைகள் வலுத்து வருகின்றன. ரீல்ஸ்களில் கட்டுக்கட்டாக பணத்தையும், கிலோ கணக்கில் தங்க நகைகளையும் காட்டி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த இவரது நாகர்கோவில் வீட்டில், கடந்த வாரம் நடந்த பெரும் நகைக்கொள்ளை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கொள்ளையர்கள் உடனடியாக கைது செய்யப்பட்ட போதிலும், மதுமிதா புகாரில் குறிப்பிட்ட 118 பவுன் நகைகளுக்கும், கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 98 பவுன் நகைகளுக்கும் இடையே முரண்பாடு நிலவுவதால், காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
நகை திருட்டு ஒருபுறமிருக்க, மதுமிதாவின் கடந்த கால பின்னணி குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. நாகர்கோவில் வடசேரி பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த ஒரு ஸ்பாவில் நடந்த சோதனையின் போது, பாலியல் புகாரில் இவர் கைது செய்யப்பட்டு பெண்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் நன்னடத்தை சான்றிதழ் மற்றும் கோர்ட் நிபந்தனைகளுடன் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கோவை என கூறிவந்த இவர் உண்மையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், உறவுமுறை அண்ணனையே காதலித்து குடும்பம் நடத்தியது உட்பட பல திருமணங்களை தாண்டி தற்போது தென்காசியைச் சேர்ந்தவரை மணந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சர்ச்சைகளின் சூடு தணிவதற்குள், மதுமிதா மீது நெல்லையைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து என்பவர் அளித்துள்ள புதிய நகை திருட்டு புகார் மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு நெல்லை நீதிமன்றம் அருகே பேச்சிமுத்துவின் வாகனத்தில் ஏறிய மதுமிதா, பஸ் ஸ்டாண்டில் இறங்கிச் சென்ற பிறகு, பேச்சிமுத்துவின் கழுத்திலிருந்த 5 பவுன் தங்கச் செயின் காணாமல் போனதாக கூறப்படுகிறது. பிசியோதெரபி சிகிச்சையின் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அப்போதே புகார் அளிக்க முயன்ற பேச்சிமுத்துவை சிலர் மிரட்டியதால், தற்போது தாமதமாக இந்த புகாரை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது ராஜாக்கமங்கலம் காவல்துறையினர் மதுமிதா மீது வழக்குப்பதிவு செய்து, இச்சம்பவம் நடந்த நெல்லை மாவட்டத்திற்கு மேல் நடவடிக்கைக்காக வழக்கை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே 118 பவுன் கொள்ளை வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வரும் சூழலில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த 5 பவுன் நகை மாயமான விவகாரமும் மதுமிதாவை சுற்றியே நகர்வது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இருப்பினும், 2022-ல் நடந்த சம்பவத்திற்கு இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஏன் என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
