பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிரபல சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர் மற்றும் ஒப்பனை கலைஞரான மேட் சந்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை மாலை நடந்த இந்த பயங்கரமான தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் மேட் சந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். அவர் சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மதுசூதன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சமூக வலைத்தளங்களில் எல்ஜிபிடிகியூ சமூகத்தினரின் உரிமைகளுக்காகவும், பாலின சமத்துவம் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவராவார். இதன் காரணமாக இணையத்தில் பல மோசமான விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டு வந்தார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருவதோடு, கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
