பெங்களூருவில் வாழும் இளைஞர் ஒருவர், அங்குள்ள அதிகப்படியான வாழ்க்கைச் செலவுகள் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷிவாங்க் கோயல் என்ற அந்தத் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர், பெங்களூருவில் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் சம்பாதித்தாலும், செலவுகள் போக அது வெறும் 4 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்குச் சமமாகவே உணர்த்துவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாகச் சம்பளம் பெறுபவர்கள் பெங்களூருவுக்கு வருவதைத் தவிர்ப்பது நல்லது என்றும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
இந்த அதீத செலவுகளுக்கான காரணங்களையும் அவர் தனது வீடியோவில் தெளிவாகப் பட்டியலிட்டுள்ளார். பெங்களூருவில் வாடகைக்கு வீடு எடுக்கச் சென்றால், முன்பணமாக 2 லட்சம் ரூபாய் வரை கொடுக்க வேண்டியுள்ளதாகவும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வெறும் 5 கிலோமீட்டர் தூரம் பயணிப்பதற்கு கேப் கட்டணமாக 600 ரூபாய் வரை செலவாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமின்றி, வார இறுதி நாட்களில் வெளியே சென்றால் கஃபேக்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என ஒவ்வொன்றும் அதிக கட்டணம் வசூலிக்கும் வகையிலேயே இருப்பதாகவும், இதனால் கையில் இருக்கும் பணம் நொடிப்பொழுதில் கரைந்துவிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஷிவாங்க் கோயலின் இந்தக் கருத்து இணையத்தில் பெரிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இளைஞர்களும், பெங்களூருவாசிகளும் அவரது கருத்தை ஆமோதித்து, இதுதான் அங்குள்ள நிதர்சனமான உண்மை எனத் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதேசமயம், மற்றொரு தரப்பினர் இது முழுக்க முழுக்க ஒருவரின் தனிப்பட்ட நிதி மேலாண்மையைப் பொறுத்தது என்றும், வரவுக்கு ஏற்ப செலவுகளைச் சரியாகத் திட்டமிட்டால் பெங்களூருவில் எந்தச் சிரமமும் இன்றி வாழ முடியும் என்றும் தங்களது மாற்றுச் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
