கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கண்டகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான சரசம்மா (50). இவரது கணவர் சிவப்பா. சிவப்பாவின் அண்ணன் சோமப்பாவின் மகன் அசோக் (27) என்பவர் அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். சமீபகாலமாக அசோக்கிற்குத் தொடர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதோடு, அவரது தொழிலிலும் கடும் நஷ்டம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலடைந்த அசோக், ஜோதிடர் ஒருவரை அணுகி ஆலோசனை கேட்டுள்ளார்.
அப்போது, அசோக்கின் குடும்பத்திற்கு யாரோ பில்லி, சூனியம் போன்ற செய்வினைகள் செய்திருப்பதாக அந்த ஜோதிடர் கூறியுள்ளார். இதைக் கேட்டதும், தன் சித்தியான சரசம்மாதான் தங்கள் குடும்பத்திற்குச் செய்வினை வைத்திருப்பார் என்று அசோக் பலமாகச் சந்தேகப்பட்டுள்ளார். இந்தச் சந்தேகத்தின் பேரில், சரசம்மாவின் குடும்பத்தாரிடம் அசோக் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இரு குடும்பத்தினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் அவர்களைச் சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு, அளவுக்கு அதிகமாக மது அருந்திய அசோக் ஆத்திரத்துடன் சரசம்மாவின் வீட்டிற்குள் புகுந்துள்ளார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிவப்பாவையும் சரசம்மாவையும் எழுப்பி, “எதற்காக எனக்குச் செய்வினை வைத்தாய்?” என்று கூறி மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், போதை தலைக்கேறிய அசோக், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரசம்மாவின் கழுத்தை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சரசம்மா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை செய்த பிறகு அங்கிருந்து தப்பிச் சென்ற அசோக், நள்ளிரவு 12.30 மணியளவில் தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சென்று சரணடைந்தார். தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் சாவித்திரி தலைமையிலான போலீசார், சரசம்மாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூடநம்பிக்கை மற்றும் மதுபோதையால் அரங்கேறிய இந்த கொடூரக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
