ரூ. 100 கோடி மோசடி வழக்கு…. குண்டர் சட்டம் ரத்தான கையோடு பி.டி. அரசகுமார் குடும்பத்திற்குப் புதுச் சிக்கல்… OMR-ல் அதிரடி ரெய்டு…!

By Nanthini on புரட்டாதி 29, 2026

Spread the love

தனியார் பள்ளிகளுக்குப் போலி சான்றிதழ்கள் வழங்கி, அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவரான பி.டி. அரசகுமார் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சென்னை மாநகர காவல் ஆணையர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து அரசகுமாரின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், காலதாமதம் மற்றும் சட்டரீதியான நடைமுறைத் தவறுகளைச் சுட்டிக்காட்டி பி.டி. அரசகுமார் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சமீபத்தில் உத்தரவிட்டனர்.

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் விரைவில் விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், இவ்வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தங்களது அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சென்னை ஓ.எம்.ஆர் (OMR) சாலையில் உள்ள பி.டி. அரசகுமாரின் மகன் மற்றும் மகள் ஆகியோரின் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனையின் போது மோசடி தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்த ஆதாரங்களைக் கைப்பற்றக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

ஏற்கனவே இந்த 100 கோடி மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து, அவரிடம் நேரடியாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத் தக்கது. தற்போது அரசகுமாரின் நெருங்கிய உறவினர்கள் வீடுகளிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த மோசடி வழக்கின் பின்னணியில் உள்ள மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.