மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான தவெகவிற்கும் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான அரசியல் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினும், தவெக சார்பில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழலில், தேர்தல் பிரசாரக் களத்தில் தலைவர்களுக்கிடையே நிலவும் தனிநபர் விமர்சனங்களும் வார்த்தைப் போரும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
பிரசாரத்தின் போது புதிய தலைமைச் செயலகக் கட்டட விவகாரத்தைக் குறிப்பிட்டு முதல்வர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். ரூ.1,200 கோடியில் கடலைப் பார்க்கும் வகையில் ‘பீச் பேசிங்’ செயலகம் கட்டத் திட்டமிடுவதாகக் கூறிய உதயநிதி, தனிப்பட்ட முறையில் சில கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உதயநிதியை ‘அந்தப்புரத்து இளவரசர்’ எனக் குறிப்பிட்டு மிகவும் காட்டமான முறையில் விமர்சித்திருந்தார். இரு தரப்பிலிருந்தும் வெளியான இந்த அனல் பறக்கும் பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவலான விவாதப் பொருளாயின.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகிய இருவரும் பரஸ்பரம் பேசிக் கொள்ளும் வீடியோ பதிவுகளைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை, இருவரையும் வன்மையாகக் கண்டித்துள்ளார். “தமிழ்நாட்டின் அரசியல் பொது விவாதங்கள் யார் இன்னும் கீழ்த்தரமாக இறங்கிப் பேச முடியும் என்ற போட்டியாகவே மாறி வருகிறது” என்று அவர் சாடியுள்ளார். அரசியல் நாகரிகத்தைத் தாண்டி இரு தலைவர்களும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்ற கருத்தையும் அவர் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து வேதனை தெரிவித்த அண்ணாமலை, “நமது இளைஞர்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களுக்குச் சரியான பாதையை உங்களால் காட்ட முடியவில்லை என்றால் கூட பரவாயில்லை, ஆனால் குறைந்தபட்சம் உங்கள் நாகரிகமற்ற செயல்பாடுகளின் இருளுக்குள் அவர்களையும் இழுத்துச் சென்றுவிடாதீர்கள்” எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். தலைவர்களின் இத்தகைய தரம் தாழ்ந்த பேச்சுக்கள் தேர்தல் களத்தின் தன்மையைக் கெடுப்பதாக அரசியல் பார்வையாளர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
