திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த தனியார் கல்லூரிப் பேராசிரியை சுகன்யா, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் ஈடுபட்டு வந்தார். தான் கொடுத்த கடன் தொகையைத் திரும்பக் கேட்பதற்காக சுமதி – துரைராஜ் தம்பதியினர் வீட்டிற்குச் சென்றபோது ஏற்பட்ட தகராறில், அவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டும் கழுத்து நெரிக்கப்பட்டும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கொலையை மறைப்பதற்காக கரட்டாம்பட்டி பாலத்தின் கீழ் வீசப்பட்ட அவரது உடல், சில நாட்களுக்குப் பின் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கொலையாளிகளான தம்பதியினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கொலைச் சம்பவத்தில் காவல்துறையினரின் அலட்சியப் போக்கும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. முன்னதாக, தனது மகளைக் காணவில்லை என சுகன்யாவின் தந்தை புகார் அளிக்கச் சென்றபோது, காவல் நிலைய எல்லைப் பிரச்சினையைக் காரணம் காட்டி உதவி ஆய்வாளர் தினேஷ் உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் அலைக்கழித்துள்ளார். தொடக்கத்திலேயே போலீசார் துரிதமாகச் செயல்பட்டிருந்தால் அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என மக்கள் தரப்பில் அதிருப்தி எழுந்தது. இதனையடுத்து, கடமையில் அலட்சியமாக இருந்த உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
