1 கிராம் இலவச தங்கம்…. CM விஜய் தரும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’….. யாருக்கெல்லாம் கிடைக்கும்?… என்னென்ன தகுதிகள்?…. இதோ முழு விவரம்…!

By Nanthini on புரட்டாதி 28, 2026

Spread the love

தமிழர்களின் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் குழந்தைப் பிறப்பின் போது தாய்மாமன் செய்யும் சீர் வரிசைக்கு எப்போதும் ஒரு தனித்துவமான இடமுண்டு. அந்த மரபைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக முதல்வர் விஜய் அவர்களால் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 22, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அரசமே தாய்மாமனாக இருந்து 1 கிராம் 22 காரட் (916 தரம்) தங்க மோதிரத்தை அன்புப் பரிசாக வழங்குகிறது. ஆண்டுக்குச் சுமார் 4.4 லட்சம் குழந்தைகள் பயனடையும் வகையில், ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இந்த மோதிரங்கள், தமிழ்நாடு அரசின் முத்திரையுடன் ‘டேம்பர்-ப்ரூஃப்’ பேக்கிங்கில் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தில் பயன்பெறத் தாய்மார்கள் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிமக்களாக இருக்க வேண்டும் என்பது முதன்மைத் தகுதியாகும். மேலும், குழந்தைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா அல்லது மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பிறந்திருக்க வேண்டும்; தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பம் தரித்த 3 மாதங்களுக்குள் PICME அமைப்பில் பதிவு செய்து RCH ID பெற்றிருப்பது கட்டாயமாகும். குழந்தைப் பிறப்பின் வரிசையோ அல்லது பாலினமோ இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை; இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் இரண்டு மோதிரங்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

   

இத்திட்டத்தின் கீழ் பயன் பெறத் தனியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. கர்ப்பிணித் தாய்மார்கள் தங்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது இருப்பிடச் சான்றுகளில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன் தாயின் அடையாளச் சான்று, PICME பதிவுச் சான்று மற்றும் குழந்தையின் பிறப்பு சான்று, மருத்துவமனைப் பிரசவச் சான்று ஆகிய ஆவணங்கள் சரிபார்க்கப்படும். மருத்துவமனையிலிருந்து தாய் மற்றும் சேய் வீடு திரும்பும் (டிஸ்சார்ஜ்) போதே, இந்த ஆவணங்களை நேரில் சரிபார்த்து உடனடியாகத் தங்க மோதிரம் கைமாற்றப்படும்.

   

செப்டம்பர் 28, 2026 முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையிலேயே நேரடியாக மோதிரம் வழங்கப்படும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் பிறந்து பின்னர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படும் குழந்தைகளுக்கோ அல்லது RCH ID இல்லாதவர்களுக்கோ இத்திட்டம் பொருந்தாது என்பதால், கர்ப்பிணிகள் ஆரம்பத்திலேயே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்வது அவசியமாகும். தமிழர்களின் உணர்வுகளை மதித்து, ஏழை எளிய குடும்பங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்தாகத் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.