திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள சிக்குபோல கவுண்டன்பட்டியைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஊமைச்சாமி என்ற பெருமாள், தனது மகன் முத்தையா (30) மற்றும் குடும்பத்தினருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்த முத்தையா, காதல் திருமணம் செய்த தனது மனைவி நந்தினியிடம் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 25 அன்று இரவும் மதுபோதையில் வந்த முத்தையா மனைவியைத் தாக்கியதால், பயந்துபோன நந்தினி வீட்டை விட்டுத் தப்பியோடினார். இதனைப் பார்த்த தந்தை பெருமாள், போதை மகனைக் கண்டித்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த முத்தையா, அங்கிருந்த தடிமனான கட்டையை எடுத்துத் தந்தை பெருமாளைச் சரமாரியாகத் தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது கொடூரக் குற்றத்தை மறைக்க எண்ணிய முத்தையா, “என் பொண்டாட்டி தான் அப்பாவைக் கட்டையால் அடிச்சுக் கொன்னுட்டா” என்று மருத்துவமனையிலேயே போலி நாடகமாடியுள்ளார். ஆனால், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்திய வடமதுரை போலிஸார், போதை ஆசாமியான முத்தையாவே தந்தையைக் கட்டையால் அடித்துக் கொன்றதைத் துல்லியமாகக் கண்டுபிடித்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
