2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பிரச்சாரச் செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்துள்ளது. அக்கட்சியின் பொருளாளர் பி.வெங்கடரமணன் கையெழுத்திட்டுச் சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கையின்படி, பொதுத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கட்சி தலைமை அலுவலகம் மூலம் மொத்தம் ரூ.19.81 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் அச்சு, மின்னணு மற்றும் வானொலி உள்ளிட்ட ஊடக விளம்பரங்களுக்காக அதிகபட்சமாக ரூ.6.35 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங்’ நிறுவனத்திற்கு ரூ.1.79 கோடியும், பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் உள்ளிட்ட விளம்பரப் பொருட்களுக்காக ரூ.40.55 லட்சமும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் த.வெ.க-வின் முதலமைச்சர் வேட்பாளரும் கட்சித் தலைவருமான சி.ஜோசப் விஜயின் பிரச்சாரப் பயணங்களுக்காக மட்டும் கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மார்ச் 14 முதல் ஏப்ரல் 28 வரையிலான காலகட்டத்தில் விஜயின் விமானப் பயணக் கட்டணங்களாக Taj Events, Chipsan Aviation மற்றும் Fly High Global Aircraft Management Services ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.3.55 கோடி செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், கட்சியின் மற்ற தலைவர்களின் பயணங்களுக்கு எவ்வித செலவும் பதிவாகவில்லை. மேலும், விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி ஆகிய இரு தொகுதிகளின் பிரச்சாரக் தேவைகளுக்காக ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பட்டியலில், பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்காக ரூ.2.06 கோடியும், இதர பிரச்சாரச் செலவுகளாக ரூ.7.04 கோடியும் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இத்தரவுகளின்படி, வேட்பாளராகப் போட்டியிட்ட விஜய்க்கு நேரடியாக ரூ.40 லட்சம் வழங்கப்பட்டுள்ள அதேவேளையில், கட்சியின் பிற வேட்பாளர்களுக்குத் தலைமை அலுவலகத்திலிருந்து தேர்தல் செலவுகள் எதுவும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், போட்டியிட்ட மற்ற அனைத்து வேட்பாளர்களும் தங்களது பிரச்சாரச் செலவுகளைச் சொந்தமாகவே ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது.
