தேசியத் தலைநகரான டெல்லியில் கடந்த 12 நாட்களில் மட்டும் 5 சிறுமிகள் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய சம்பவமாக, டெல்லி வசீராபாத் பகுதியைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமிக்குச் சமூக வலைதளம் மூலம் 20 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர் சிறுமியை ஆசைகாட்டி ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வீடு திரும்பிய சிறுமி அழுதுகொண்டே நடந்த கொடுமையைப் பெற்றோரிடம் கூறியதையடுத்து, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
கடந்த செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 23 வரையிலான 12 நாட்களில் மட்டும் சுவரூப் நகரில் 16 வயது சிறுமி படுகொலை, சதர் பஜாரில் 11 வயது சிறுமி, கரோல் பாக்கில் 6 வயது பிஞ்சு, கல்காஜியில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் தற்போது வசீராபாத்தில் 13 வயது சிறுமி என அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரங்கள் தலைநகரை நிலைகுலைய வைத்துள்ளன. இச்சம்பவத்தில் தப்பியோடிய குற்றவாளியைப் போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
