உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வேயில், பயணிகள் நிறைந்த ஈரடுக்கு (டபுள் டெக்கர்) பேருந்து ஒன்றில் திடீரென ஏற்பட்ட கடும் தீவிபத்தில், ஒரு பெண் உட்பட 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நொய்டாவிலிருந்து மகோபா நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். தீ தீவிரமாகப் பரவியதால், அதிர்ச்சியடைந்த பல பயணிகள் தப்பிக்க பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினரும் ஜேவர் காவல் நிலைய போலீசாரும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீ மீட்புப் பணிகளை மேற்கொண்டு, சிக்கியிருந்த சில பயணிகளைப் பத்திரமாக மீட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் கூரையில் அளவுக்கு அதிகமான லக்கேஜ்கள் மற்றும் உடமைகள் ஏற்றப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. நீண்ட தூரப் பேருந்துகளில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அவசரகால ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது. தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், காவல்துறையும் தீயணைப்புத் துறையும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன. காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
