“துணை முதல்வர் பதவி தறேன்னு சொன்னாங்க”…. மேடையில் ஆதவ் அர்ஜுனா ரகசியத்தை உடைத்த சீமான்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

By Nanthini on புரட்டாதி 24, 2026

Spread the love

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனித்து களமிறங்குகிறது. இதில் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யையும் அவரது கட்சியையும் கடுமையாக விமரித்துப் பேசினார். மக்கள் பிரச்சனைகளை மனதில் இருந்து பேசத் தெரியாதவர்கள் குறிப்புகளைக் கொண்டு மட்டுமே அரசியலில் நுழைய முற்படுவதாகக் கூறி, தனது வழக்கமான அதிரடி பாணியில் சாடினார்.

பிரச்சார மேடையில் உரையாற்றிய சீமான், ஆதவ் அர்ஜுனா தன்னை நேரில் வந்து சந்தித்த நிகழ்வைக் குறிப்பிட்டு ஆவேசம் அடைந்தார். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க சம்மதித்தால், தனக்குத் துணை முதல்வர் பதவி அல்லது வேளாண் துறை அமைச்சர் பதவி தருவதாகப் பேரம் பேசப்பட்டதாகத் தெரிவித்தார். இத்தகைய அரசியலை அடியோடு நிராகரித்ததாகக் கூறிய அவர், “ஆட்டுக்கு இருக்கும் மூளை கூட தவெக கட்சியினருக்கு கிடையாது” என்று காட்டமாக விமர்சித்ததோடு, குறிக்கோளோடு செயல்படுபவனே தலைவனே தவிர குறிப்புகளைப் பார்த்துப் பேசுபவன் அல்ல என்று விஜய்யை மறைமுகமாகத் தாக்கினார்.

   

கடந்த 15 ஆண்டுகளாகத் திராவிட அரசியலுக்கு எதிரான மாற்றுக் கருத்தியலைத் தங்களது கட்சி தரைமட்டத்தில் உழைத்துக் கட்டமைத்துள்ளதாகவும், அதைத் தவெகவினர் மிக எளிதாக அறுவடை செய்யப் பார்ப்பதாகவும் சீமான் குற்றம் சாட்டினார். மக்கள் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைப் பிரச்சனைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடும்போது களத்திற்கு வராமல், விசில் ஊதிக்கொண்டு மட்டுமே வரும் தவெகவின் அணுகுமுறை கவலைக்கிடமானது எனச் சாடிய அவர், களப் போராட்டங்களில் பங்கேற்காதவர்கள் எப்படி மக்கள் பிரதிநிதிகளாக முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

   

தொடர்ந்து சட்டப்பேரவை செயல்பாடுகள் மற்றும் ஆட்சி நிர்வாகம் குறித்துப் பேசிய சீமான், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் குறித்துக் கேள்வி எழுப்பினால் உடனடியாகப் பதிலளிக்காமல் மூன்று நாட்கள் கழித்து எழுதி வந்து வாசிக்கும் போக்கு நிலவுவதாகக் குறிப்பிட்டார். “உங்கள் ஆட்சியில் போகப் போகக் குற்றங்கள் கூடியது, ஆனால் எங்கள் ஆட்சியில் போகப் போகக் குற்றங்கள் முற்றுமுழுதாகக் குறைக்கப்படும்” என்ற உறுதியை அளித்த அவர், மக்கள் பிரச்சனைகளில் உண்மையான அக்கறையோ கள அனுபவமோ இல்லாமல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் அரசியலை மக்கள் புறந்தள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.