சேலம் மசாஜ் சென்டர் கொடூரம்…. 250 நாட்கள் பிணவறையில் கிடந்த சடலம்.. பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…. 5 வருஷமா போலீசுக்கே அல்வா கொடுத்த பெண்….!

By Nanthini on புரட்டாதி 23, 2026

Spread the love

சேலம் மாநகரில் கடந்த 2021-ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வங்கதேசப் பெண் கொடூரக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் பியூட்டி பார்லர் மற்றும் மசாஜ் சென்டர் நடத்தி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த தேஜ்மண்டல் (26) என்பவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த கொடூரச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த முதன்மை குற்றவாளியான நிஷி என்ற பெண்ணை, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வைத்து சேலம் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து, சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இக்கொலைச் சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோத பாலியல் தொழில், சம்பள பாக்கி மற்றும் முக்கோணக் காதல் தகராறு இருந்தது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட தேஜ்மண்டலும், சேலம் ஆத்தூரைச் சேர்ந்த பிரதாப் என்பவரும் இணைந்து சேலத்தின் பள்ளபட்டி மற்றும் சங்கர் நகர் பகுதிகளில் மசாஜ் சென்டர்களை நடத்தி வந்தனர். ஆனால், அதன் மறைவில் வங்கதேசத்திலிருந்து பெண்களை வரவழைத்து சட்டவிரோத பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அங்கு வேலை பார்த்த நிஷி, ஷீலா, ஓஷி மற்றும் லுப்லு ஆகியோருக்குச் சரிவர சம்பளம் வழங்காமல் தேஜ்மண்டல் கொடுமைப்படுத்தியதோடு, நிஷியின் கணவரான லுப்லுவுடன் தேஜ்மண்டலுக்குக் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

   

இதனால் ஆத்திரமடைந்த நிஷி மற்றும் அவரது கூட்டாளிகள், தேஜ்மண்டலைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர். கடந்த 2021 அக்டோபர் மாதம் பிரதாப் சென்னை சென்றிருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த நால்வரும் தேஜ்மண்டலின் கை, கால்களைச் சேலையால் கட்டி, மூச்சுத்திணறடித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர், அவரது உடலை ஒரு டிராலி சூட்கேஸில் அடைத்து வைத்துவிட்டு, பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு எல்லை தாண்டி வங்கதேசத்திற்குத் தப்பிச் சென்றனர். உறவினர்கள் யாரும் உரிமை கோரி வராததால், தேஜ்மண்டலின் சடலம் 250 நாட்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனை பிணவறையிலேயே வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

   

வங்கதேசத்திற்குத் தப்பிய முதன்மை குற்றவாளி நிஷி, சில காலத்திற்குப் பிறகு தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். பின்னர் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், ரகசியத் தகவலின் அடிப்படையில் சேலம் தனிப்படை போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இக்கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரையும் சர்வதேச எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (BSF) உதவியுடன் பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.