பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு, உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக் குரல்களும் வலுத்து வருகின்றன. வழக்கமாக மக்கள் மத்தியில் இத்தகைய கொந்தளிப்பு ஏற்படும்போது, மாற்று இடத்தை பரிசீலிப்பது அரசின் வழக்கமான நடைமுறையாகும். ஆனால், ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் எதிர்காலம் மற்றும் மீன்பிடித் தொழிலின் பாதிப்பு குறித்த அச்சங்களைப் பொருட்படுத்தாமல், அரசு இந்த இடத்திலேயே புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவதில் உறுதியாக இருப்பது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கிண்டி ரேஸ் கோர்ஸ், தீவுத்திடல், சேப்பாக்கம் எழிலகம், சிந்தாதிரிப்பேட்டை பல்லவன் இல்ல வளாகம் எனப் பல மாற்று இடங்களைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்தும், அவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிராகரிக்கப்பட்டுள்ளன. பல்லவன் இல்ல நிலத்திற்கு அருகில் மயானம் அமைந்திருப்பதால் ஏற்படும் ‘எதிர்மறை ஆற்றல்’, எழிலகம் வளாகத்தில் கிழக்கு நோக்கிய முகப்பை அமைப்பதில் உள்ள இடர்பாடுகள் எனப் பல்வேறு காரணங்கள் வாஸ்து ரீதியாக முன்வைக்கப்பட்டுத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மக்கள் நலனை முதன்மைப்படுத்த வேண்டிய அரசு திட்டமிடலில், அறிவியல் பூர்வமான அணுகுமுறையை விட மூடநம்பிக்கைகளும் வாஸ்து விதிகளுமே ஆதிக்கம் செலுத்துகின்றனவோ என்ற அச்சத்தை இந்நடவடிக்கைகள் வித்திட்டுள்ளன.
குறிப்பாக, கிழக்கே அமைந்த பரந்த கடலைப் பார்த்தவாறு தலைமைச் செயலகமும் முதலமைச்சரின் அறையும் அமைந்தால், அதிகார மையத்திற்கு யோகமும் அதிர்ஷ்டமும் பெருகும் என்ற ஜோதிடர்களின் ஆலோசனையே பட்டினப்பாக்கம் தேர்வுக்கு முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. மாநிலத்தின் நிதிநிலை நெருக்கடியான சூழலில் இருக்கும்போது, ₹1,200 கோடி மக்கள் வரிப்பணத்தில் கடலோரத்தில் இவ்வளவு ஆடம்பரமான கட்டடம் கட்டுவதும், அதற்கு வாஸ்து காரணங்களை முதன்மைப்படுத்துவதும் நடுநிலையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஜனநாயக நாட்டின் ஒரு முதன்மை நிர்வாக மையம் என்பது, எளிய மக்களின் தேவைகளையும் வாழ்வாதாரத்தையும் மதித்துச் செயல்படவே உருவக்கப்பட்டதாகும். தலைமுறை தலைமுறையாகக் கடலையே நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரக் கண்ணீரைக் காட்டிலும், தனிநபர் நம்பிக்கைகளும் வாஸ்து பலன்களுமே மேலோங்குமானால் அது ஜனநாயகப் பண்புகளுக்கே கேள்விக் குறியாக அமையும். எனவே, பிடிவாதத்தைத் தளர்த்தி மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாற்று இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
