தொழிலதிபர் ‘ஜெம்’ வீரமணி மீதான போக்சோ வழக்குத் தொடர்பாக, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் விளக்கத்தைக் சுட்டிக்காட்டி அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். வீடியோ ஆதாரம் தெளிவாக இல்லை எனக் கூறி வழக்கை முடித்து வைக்க முயன்றதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், நீதிமன்றம் வழங்கிய 45 நாட்களுக்குள் புலன் விசாரணையை முடிக்க முடியாவிட்டால், காவல்துறை ஏன் நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கேட்கவில்லை என்று நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் அக்டோபர் மாதம் முதல் சுமார் 5 மாதங்கள் இந்த வழக்கு எவ்வித முன்னேற்றமும் இன்றி கிடப்பில் போடப்பட்டிருந்ததாக நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். வீடியோ ஆதாரத்தை அழித்து, குற்றவாளியைக் காப்பாற்றும் நோக்கில் திமுக அரசு செயல்பட்டுள்ளதாகவும், அதிகார மையத்தில் உள்ள முக்கிய ‘பவர் செண்டர்’ ஒருவரை அணுகியே வீரமணி இந்த விவகாரத்தில் தப்பிக்க முயன்றிருக்கக்கூடும் என்றும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தைப் போல இதிலும் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே அரசு முயன்றதாகச் சாடிய அமைச்சர், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை தன் வசம் வைத்திருந்தும் இந்த விவகாரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்று வினவினார். திமுக ஆட்சிக் காலத்தில் இதுபோன்று எத்தனை வழக்குகள் பேரம் பேசப்பட்டு முடித்து வைக்கப்பட்டன என்றும், குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையில் திமுகவினர் தொடர்ந்து நடந்து கொள்வதாகவும் அவர் சாடியுள்ளார்.
தற்போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சாட்சியங்களிடம் துல்லியமாக வாக்குமூலங்கள் பெறப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதேவேளையில், நிர்மல் குமாரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ, வழக்கை அரசு கைவிடவில்லை என்றும், உரிய ஆதாரங்கள் கிடைக்கும் வரை மேல் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்ற குறிப்பாணையே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது என்றும் விளக்கமளித்துள்ளார்.
