“246 கேள்விகள்… 7 மணி நேரம்”…. அப்ரூவல் மோசடியில் அடுத்த விக்கெட்?…. வளைத்துப்பிடித்த CCB…. சிக்கிய அன்பில் மகேஸின் நிழல்….!

By Nanthini on புரட்டாதி 22, 2026

Spread the love

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு மற்றும் நகர் ஊரமைப்புத் துறை (DTCP) அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இக்குற்றச்சாட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் நெருங்கிய நண்பரான வாளாடி கார்த்திக்கிற்குச் சம்மன் அனுப்பப்பட்டு, அவர் தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

   

இவ்வழக்கின் முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஏற்கனவே பி.டி. அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய மூன்று நபர்களைக் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் முன்னாள் உதவியாளர் அருள் முருகனிடமும் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து சுமார் 100 கோடி ரூபாய் வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகாரில், அருள் முருகன் மற்றும் வாளாடி கார்த்திக் ஆகிய இருவரிடமும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் இச்சம்பவம் அரசியல் மற்றும் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

முன்னதாக, வழக்கின் முக்கிய ஆதாரங்களைக் கைப்பற்றும் நோக்கில் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட சம்மனின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய குற்றப்பிரிவு முன் அன்பில் மகேஸ் நேரில் ஆஜரானார். அப்போது, சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் 246 கேள்விகள் கேட்கப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டது.

 

இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் அடிப்படையில் சோடிக்கப்பட்ட வழக்கு என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சட்டப்போராட்டத்தை நீதிமன்றம் மூலம் நேர்மையாக எதிர்கொண்டு உண்மை நிலையை வெளிக்கொணர்வேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில், அமைச்சரின் முன்னாள் உதவியாளர் மற்றும் நண்பரிடம் நடத்தப்பட்டு வரும் அடுத்தடுத்த விசாரணைகள் மூலம் இவ்வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.