பெங்களூரு பிலேகஹள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பீகாரைச் சேர்ந்த ரஞ்சீத் குமார் குப்தா (40) என்பவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர் தனது மனைவி குஞ்சா மாதேசியா (38) என்பவரைச் செப்டம்பர் 16 அன்று படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக இத்தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் 16 காலை குழந்தைகள் பள்ளிக்குச் சென்றவுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரஞ்சீத், மனைவியின் கழுத்தில் துப்பட்டாவைச் சுற்றி நெரித்துக் கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர், மாலையில் மீண்டும் வீட்டிற்கு வந்து சமையல் எண்ணெய்யைக் கொதிக்க வைத்து, மனைவியின் முகத்தில் ஊற்றித் தற்கொலை போல் மாற்ற முயன்றுள்ளார். ஆனால், முகம் முழுமையாக எரியாததால் சந்தேகம் அடைந்த போலிஸ் ஆய்வாளர் நடராஜ் டி.என் தலைமையிலான குழுவினர் ரஞ்சீத்திடம் தீவிர விசாரணை நடத்தி, அவனது நாடகத்தைக் கண்டுபிடித்தனர். விசாரணையில், மனைவி தனது தொலைபேசி அழைப்புகளை எடுக்காததும், குடும்பத் தகராறுமே கொலைக்குக் காரணம் என ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ரஞ்சீத் சிறையில் அடைக்கப்பட்டார்.
