தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் கட்டேபல்லி கிராமத்தைச் சேர்ந்த எனுகு மதுசூதன் ரெட்டியின் மகள் பல்லவி (20). இவர் கட்கேசர் காவல் எல்லைக்குட்பட்ட கொம்முரி பிரதாப் ரெட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி இவருக்கு, சைதன்யபுரி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவருடன் குடும்பத்தினரால் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
திருமணம் முடிந்து சில நாட்களிலேயே, கூடுதல் வரதட்சணை கேட்டு பல்லவியை அவரது கணவர் உடலளவிலும் மனதளவிலும் கொடுமைப்படுத்தத் தொடங்கியுள்ளார். கணவரின் வரதட்சணைக் கொடுமையைத் தாங்க முடியாத பல்லவி, தான் படித்து வந்த கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
காயமடைந்த அவர் உடனடியாக சிகிச்சைக்காக ஜீடிமெட்லாவில் உள்ள நீலிமா மருத்துவமனையிலும், பின்னர் மேடிபல்லியில் உள்ள ஸ்ரீ கர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பல்லவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பல்லவியின் தாய் சந்தியா அளித்த புகாரின் பேரில் கட்கேசர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
