தேயிலைத் தோட்டத்தில் நடந்த கொடூரம்…. கள்ளக்காதலனை வரவழைத்து தலையைத் துண்டித்த பெண்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட வாலிபரின் சடலம்…..!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

அசாம் மாநிலம் ஜோர்ஹட் மாவட்டத்தில், திருமணத்திற்கு மீறிய தொடர்பினால் 31 வயது இளைஞர் ஒருவர் தலைதுண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பக்கத்து வீட்டுக்காரர், அவரது மனைவி உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி மாயமான அனில் என்ற இளைஞரின் குடும்பத்தினர் மரியானி காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், போக்தோய் ஆற்றங்கரைப் பகுதியில் இருந்து அனிலின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இக்கொடூரக் கொலை வெளிச்சத்திற்கு வந்தது.

மரியானியின் துணைக்காவல் கண்காணிப்பாளர் திரிநயன் சாமுவா அளித்த தகவலின்படி, அனிலுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் அனிமா கர்மாகர் என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் திருமணத்திற்கு மீறிய தொடர்பு இருந்துள்ளது. இதனையறிந்த அனிமாவின் கணவர் கபில் கர்மாகர், அனிலைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார். இதன்படி, கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி அனிமா மூலம் அனிலை அருகிலுள்ள தேயிலைத் தோட்டப் பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அனிமாவின் கணவர் கபில், அவரது தம்பி சஞ்சித் கர்மாகர் மற்றும் அவர்களது நண்பரான மகேஷ் ராஜ்கர் ஆகியோர் அனிலைக் கொலை செய்யத் தயாராகக் காத்திருந்துள்ளனர்.

   

திட்டமிட்டபடி, அனிமா முதலில் அனிலைக் கத்தியால் குத்த, அதைத் தொடர்ந்து மற்ற மூவரும் சேர்ந்து அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பின்னர், அனிலின் கழுத்தைக் கத்தியால் அறுத்து, அரிவாளால் தலையைத் துண்டித்துக் கொலை செய்துள்ளனர். குற்றத்தை மறைக்கும் நோக்கில், உடலை ஒரு சாக்குமூட்டையில் அடைத்து, ஆற்றங்கரைக்கு இழுத்துச் சென்று புதைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் வீட்டிலிருந்தே கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

   

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், கொலை, குற்றச்சதி மற்றும் ஆதாரங்களை மறைத்தல் உள்ளிட்ட பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணையில் நான்கு பேரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் அவர்களை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, மீட்கப்பட்ட அனிலின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.