“ஒரே இரவில் சடலமான நண்பர்கள்”… சுடுகாட்டில் தொங்கிய சடலம்…. சேலத்தை உலுக்கிய இரட்டை கொலை…. வெளிவரும் பகீர் காரணம்….!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி மற்றும் ஓமலூர் அருகே, 15 வயது பள்ளி மாணவரும் அவரது 24 வயது நண்பரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் அருகேயுள்ள கருக்கல்வாடி ஊராட்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தறித் தொழிலாளி நாகராஜின் மகன் கவுசிக் (15). இளம்பிள்ளை அருகேயுள்ள கே.ஆர்.தோப்பு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர், மகுடஞ்சாவடி – இடங்கணசாலை சாலையில் உள்ள சித்தனூர் இரும்பாலைக்குச் சொந்தமான இடத்தில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கவுசிக்கின் நெருங்கிய நண்பரான அதே கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தறித் தொழிலாளி சிவராஜ் (24), ஓமலூர் தெசவிளக்கு பகுதியில் உள்ள சுடுகாட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த இரு மரணங்களும் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் இருவரும் செப்டம்பர் 18-ஆம் தேதி இரவு 9 மணியளவில் ஒன்றாக வீட்டை விட்டுச் சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

   

தகவலறிந்த மகுடஞ்சாவடி மற்றும் ஓமலூர் காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் நேரில் சென்று தீவிர கள ஆய்வு மேற்கொண்டார். சிவராஜ், மாணவன் கவுசிக்கைக் கொலை செய்துவிட்டுப் பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது இருவரது மரணத்தின் பின்னணியிலும் வேறு ஏதேனும் கும்பல் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

சம்பவம் நடைபெற்ற பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், இருவரின் மற்ற நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாக்கப்பட்ட பின்னரே மரணத்திற்கான முழுமையான காரணம் தெளிவுபெறும் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே இரவில் இரு நண்பர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த இச்சம்பவம் மகுடஞ்சாவடி மற்றும் ஓமலூர் வட்டாரப் பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.