மாணவர் பாரதிதாசனுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான காரசாரமான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. “மாணவனுக்கு அரசு சார்பில் நிதி வழங்க முடியாது என்றால், திமுக-வும் தமிழ்நாட்டு மக்களும் இணைந்து அவருடைய முழு கல்விக் கட்டணத்தையும் ஏற்று அவரைப் படிக்க வைப்போம்” என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் வன்னியரசு, “மாணவர்கள் மீது அவ்வளவு அக்கறை இருக்கிறது என்றால், கடந்த ஆட்சிக்காலத்தில் ஏன் அனைத்து மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகையைக் கொடுக்கவில்லை?” என எதிர்க்கேள்வி எழுப்பியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
அமைச்சரின் இந்தக் கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், வெளியிட்டுள்ள அறிக்கையில் வன்னியரசை வன்மையாகக் கண்டித்துள்ளார். தகுதியான மாணவன் பாரதிதாசனுக்கு உரிய நிதியை வழங்காமல் வஞ்சித்துவிட்டு, அதற்கான ஆதாரங்கள் வெளிவந்த பிறகும் பழிசொல்லில் இருந்து தப்பிக்க அமைச்சர் வியாக்கியானம் பேசி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் மாணவனின் கல்விக் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த பிறகே, பயந்துபோய் இந்த அரசு நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய பட்டியல் சமூக மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டதாகக் கோவி. செழியன் விளக்கமளித்துள்ளார். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 2021-22-ஆம் ஆண்டில் ரூ.5.31 கோடியாக இருந்தது, 2025-26-ஆம் ஆண்டில் ரூ.84.87 கோடியாக உயர்த்தப்பட்டது என்றும், பயனாளிகளின் எண்ணிக்கை 9-லிருந்து 213 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளார். உண்மை நிலவரத்தையும் இந்த வளர்ச்சியையும் தெரிந்து கொள்ளாமல் அமைச்சர் வன்னியரசு பதவிக்காகப் பொய்களைப் பேசி வருகிறார் என்றும் அவர் சாடினார்.
தற்போது தவெக ஆட்சியில் இத்திட்டம் தொய்வடைந்து, மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தன் உரிமையைப் பொதுவெளியில் கேட்டதற்காக மாணவன் பாரதிதாசனை பழிவாங்கும் நோக்கில் நடத்துவதும், சமூக வலைதளங்களில் அவதூறுகளுக்கு ஆளாக்குவதும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக நிற்பதாகக் கூறிக்கொள்ளும் அமைப்பைச் சேர்ந்த வன்னியரசு, தனது தவறுகளையும் அரசின் வீழ்ச்சியையும் மறைக்கவே தற்போது மாணவனை ‘தம்பி’ என அழைத்து நாடகமாடி மடைமாற்றப் பார்க்கிறார் எனத் தனது அறிக்கையில் கோவி. செழியன் சாடியுள்ளார்.
