லண்டனில் இருந்து திரும்பியதும் ‘நோ காம்ப்ரமைஸ்’….. தலைமைச் செயலகத்தில் விஜய் எடுத்த அந்த ஒரு முடிவு… கலக்கத்தில் மூத்த அதிகாரிகள்…..!

By Nanthini on புரட்டாதி 18, 2026

Spread the love

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றிருந்த முதல்வர் விஜய், அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். சென்னை வந்தடைந்ததும், தலைமைச் செயலகத்திற்குச் சென்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதல்வர் விஜய் உறுதிமொழியை வாசிக்க, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் செயலக ஊழியர்கள் அனைவரும் அவருடன் இணைந்து சமூக நீதி உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழி ஏற்பு நிகழ்வு முடிந்த கையோடு, அவர் நேரடியாகத் தனது அலுவலகப் பணிகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

முதல்வர் ஒரு வார காலம் வெளிநாட்டில் இருந்ததால், அவரது பரிசீலனைக்காகப் பல அவசரக் கோப்புகள் காத்திருந்தன. அவசியமான கோப்புகளில் கையெழுத்திட்ட பிறகு, மாநிலத்தின் முக்கிய நிலவரங்கள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் அவர் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். குறிப்பாக, புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம், அன்பில் மகேஷ் மீதான சோதனைகள் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் உள்ளிட்ட விவகாரங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன.

   

பட்டினம்பாக்கம் கடலோரப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு அப்பகுதி மீனவ அமைப்புகளும், பொதுநல அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, அப்பகுதியில் இருந்த தவெக கொடிக்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் விவரித்தபோது முதல்வர் வருத்தமடைந்தார். இதற்கு என்ன தீர்வு என்று அவர் வினவ, “மீனவ மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசினால் அவர்களின் பயமும் எதிர்ப்பும் தணிய வாய்ப்புள்ளது” என அதிகாரிகள் யோசனை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களின் நிலவரத்தை அதிகாரப்பூர்வமற்ற முறையில் (Off the record) கேட்டறிந்த பின்னரே அவர்களைச் சந்திப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்ற அதிகாரிகளின் கருத்துக்கு முதல்வர் பச்சைக்கொடி காட்டினார்.

   

அடுத்தபடியாக, அன்பில் மகேஷ் மீதான மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சோதனை அறிக்கை மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கியபோது, கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடர முதல்வர் ஒப்புதல் அளித்தார். அதேபோல, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது ஆகம விதிகளை மீறியமை, மக்கள் பட்ட அவதிகள் மற்றும் சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டதில் நடந்த குளறுபடிகள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். சென்னை திரும்பிய உடனேயே நிலுவையில் உள்ள இத்தகைய முக்கியப் பிரச்சினைகள் குறித்து முதல்வர் காட்டிய தீவிர கவனம், தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் சுறுசுறுப்பை ஏற்படுத்தியுள்ளது.