#BREAKING: திமுக எம்.பி கனிமொழி பெயரில் அதிரடி மாற்றம்…. நாடாளுமன்ற பதிவேடுகளில் புதுப் பெயர்….!

By Nanthini on புரட்டாதி 18, 2026

Spread the love

திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது பெயரை “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” என அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார். இதுவரை “கனிமொழி கருணாநிதி” என்று அறியப்பட்டு வந்த அவர், தற்போது தனது தாயார் ராஜாத்தி அம்மாளின் பெயரையும் தன்னோடு முறைப்படி இணைத்துக் கொண்டுள்ளார். தந்தை பெயருடன் தாய் பெயரையும் இணைத்து அவர் எடுத்துள்ள இந்த முற்போக்கான முடிவு, தமிழக அரசியல் களத்திலும் பொதுவெளியிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஒருவர் தனது பெயரைச் சட்டரீதியாக மாற்றுவதற்கு அரசு இதழில் பதிவு செய்ய வேண்டிய நடைமுறைகளின்படி, தமிழ்நாடு அரசிதழில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1968 ஜனவரி 5-ஆம் தேதி பிறந்த அவர், இனி அரசு ஆவணங்கள், அரசியல் மேடைகள் மற்றும் நாடாளுமன்றப் பதிவேடுகளில் “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” என்றே குறிப்பிடப்படுவார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற இணையதளத்திலும் இவரது புதிய பெயர் முறைப்படி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

   

ஆரம்ப காலத்தில் கவிதை, இலக்கியம் மற்றும் இதழியலில் ஆர்வம் காட்டி வந்தபோது “கனிமொழி” என்ற ஒற்றைப் பெயரிலேயே இவர் பரவலாக அறியப்பட்டார். பின்னர் தீவிர அரசியலில் களமிறங்கியபோது, தந்தை மு. கருணாநிதியின் பெயரை இணைத்து இயங்கத் தொடங்கினார். 2007, 2013-ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராகவும், 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம், அத்தொகுதியில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்ற முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையும் படைத்துள்ளார். தற்போது நாடாளுமன்ற மக்களவையில் திமுக குழுவின் தலைவராகவும் இவர் செயல்பட்டு வருகிறார்.

   

சமூகத்தில் பொதுவாகத் தந்தையின் பெயரை மட்டுமே முதலெழுத்தாகவோ அல்லது பின்னொட்டாகவோ பயன்படுத்தும் வழக்கத்திற்கு மாற்றாக, தாயின் பெயரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு நீண்டநாட்களாகவே இருந்துள்ளது. தனது தாயார் நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போதே இந்த மாற்றத்தை மேற்கொண்டு அவரை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும் என விரும்பி இம்மூடிவை எடுத்துள்ளார். மேலும், பொதுவெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே பெயர் கொண்டவர்களால் ஏற்படும் கருத்துப் பரிமாற்றக் குழப்பங்களைத் தவிர்க்கவும் இந்த தனித்துவ அடையாளம் வழிவகுக்கிறது.

 

பெற்றெடுத்த தாய்க்குச் சம உரிமையும் அங்கீகாரமும் அளிக்கும் வகையில் கனிமொழி எடுத்துள்ள இந்த முன்னெடுப்பிற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மறைந்த தந்தை கலைஞர் கருணாநிதி மற்றும் தாய் ராஜாத்தி அம்மாள் ஆகிய இருவரின் பெயர்களையும் சமமாகத் தனது பெயரில் சுமந்து நிற்கும் இவரது இந்தச் செயல், சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டு ஒரு சிறந்த முன்மாதிரியாகப் பேசப்பட்டு வருகிறது.