தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 16 வயது சிறுமி ஒருவருக்குச் சிகரெட்டில் கஞ்சா மற்றும் போதை மருந்துகளைக் கலந்து கொடுத்து, சிறுவர்கள் உட்பட 8 பேர் கொண்ட காம கொடூரக் கும்பல் மாற்றி மாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து நாட்டையே உலுக்கியுள்ளது.
தந்தையின் கண்டிப்பால் வீட்டை விட்டு வெளியேறிய அச்சிறுமியை, சமூக வலைத்தளம் மூலம் பழக்கமான நீரஜ், விக்கி மற்றும் அவரது கூட்டாளிகள் பொல்லாரம் ரயில் நிலையத்தில் வளைத்துள்ளனர். அவருக்குப் போதை கஞ்சா சிகரெட் மற்றும் மயக்க மருந்து கலந்த சாக்லேட் கொடுத்து மயங்க வைத்த அரக்கர்கள், துலபள்ளியில் உள்ள ஹோட்டல் அறை, காலி ரயில் பெட்டி, கார் மற்றும் வீடுகள் எனப் பல்வேறு இடங்களுக்குக் கடத்திச் சென்று மிருகத்தனமாகச் சீரழித்துள்ளனர். அத்துடன் நிற்காமல், அங்கிருந்து தப்பிக்க முயன்ற சிறுமியை மீண்டும் பிடித்து ஆட்டோவில் வைத்து கொடூரம் இழைத்துள்ளனர்.
இறுதியில் ஆட்டோவில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்து வீட்டிற்கு வந்த சிறுமி, பெற்றோரிடம் அழுது கதறி நடந்த கொடூரத்தை உடைத்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து செயல்பட்ட போலிஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுவர்கள் உட்பட 8 பேரைக் கைது செய்தனர். மேலும், உரியச் சோதனை இன்றி அறை கொடுத்த ஹோட்டல் உரிமையாளரையும் கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்றொரு கொடூரனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
