ஓடும் காரில் கழுத்தறுப்பு… குடிநீர் தொட்டியில் வீசப்பட்ட அழுகிய சடலம்… வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை…!

By Nanthini on புரட்டாதி 16, 2026

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் சங்கிலி முருகன் (38). இவர் கடந்த 10-ஆம் தேதி முதல் திடீரென மாயமானதால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சங்கிலி முருகனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாயமான சங்கிலி முருகன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் மறைக்கப்பட்டிருப்பது அம்பலமானது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பாக்கிய செல்வம் என்பவரது மகளைச் சங்கிலி முருகன் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பாக்கிய செல்வம் குடும்பத்தினருக்கும் சங்கிலி முருகனுக்கும் இடையே கடுமையான முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாக்கிய செல்வம், தனது கூட்டாளிகளான முருகன் மற்றும் மருதுபாண்டி ஆகியோருடன் சேர்ந்து சங்கிலி முருகனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.

   

திட்டமிட்டபடி, சங்கிலி முருகனை திண்டுக்கல் சாலையில் காரில் கடத்திச் சென்ற கும்பல், ஓடும் காரிலேயே அவரது கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துள்ளது. பின்னர், குற்றத்தை மறைக்கும் நோக்கில், சங்கிலி முருகனின் உடலை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பின் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்குள் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

   

விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பாக்கிய செல்வம், முருகன் மற்றும் மருதுபாண்டி ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், குடிநீர் தொட்டியிலிருந்து அழுகிய நிலையில் இருந்த சங்கிலி முருகனின் சடலத்தை மீட்ட காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.