புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தவெகவின் முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் களத்தில் உள்ளதால், இத்தொகுதியில் தற்போது கடும் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. கடந்த தேர்தலில் திமுகவுடன் இணைந்து களம் கண்ட காங்கிரஸ் , இம்முறை தவெகவின் ஆதரவோடு புதிய அரசியல் கூட்டணிக் கணக்குகளுடன் தேர்தல் களத்தைச் சந்திக்கிறது.
