“ரத்தம் சொட்டச் சொட்ட கிடந்த ஸ்டாலின்”…. பிரியங்கா காந்தியை கண்கலங்க வைத்த சம்பவம்…. ஆ.ராசா ஓபன் டாக்….!

By Nanthini on புரட்டாதி 12, 2026

Spread the love

சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து தவறான கருத்துகள் பேசப்பட்டதாகக் கூறி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்றுப் பேசிய திமுக முன்னாள் எம்பி ஆ.ராசா, பெரிய நடிகராக இருப்பதோ, 750 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதோ, முதலமைச்சராக இருப்பதோ பெரிய விஷயமல்ல என்றும், எல்லாவற்றுக்கும் மேலாக அனைவரும் முதலில் மனிதனாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு என்று ஈடுஇணையற்ற வரலாற்றுச் சிறப்பும் அரசியல் நாகரிகமும் உண்டு எனச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டின் மானத்தையும் பாரம்பரியத்தையும் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

   

கடந்த கால அரசியல் நிகழ்வுகளை நினைவுகூர்ந்த ஆ.ராசா, எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் கலைஞர் மீது அமைச்சர் குழந்தைவேலு முன்வைத்த குற்றச்சாட்டைப் பற்றிப் பேசினார். அக்குற்றச்சாட்டு பொய் என நிரூபணமாகி அமைச்சர் பதவி விலக முற்பட்டபோது, எம்.ஜி.ஆரின் கோரிக்கையை ஏற்று கலைஞர் அவரை மன்னித்த பெருந்தன்மையைக் குறிப்பிட்ட அவர், திராவிட இயக்கம் எப்போதும் காரசாரமான கேள்விகளுக்குக்கூட நாகரிகமாகப் பதிலளித்து வந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். அத்துடன், பேரவையில் வரலாற்று உண்மைகளுக்கு மாறாகப் பேசப்படும்போது அதைத் திருத்தாமல் மௌனம் காக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் போக்கையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

   

1976-ல் எமர்ஜென்சியின் போது ‘மிசா’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் அனுபவித்த சிறைக் கொடுமைகளை விவரித்த ஆ.ராசா, அப்போது 23 வயதே நிரம்பிய ஸ்டாலினைக் காப்பாற்ற முயன்ற சிட்டிபாபு சிறையிலேயே உயிர்த்தியாகம் செய்ததை நினைவு கூர்ந்தார். சிறையில் தனக்கு விழுந்த அடிகளைப் பொருட்படுத்தாமல், நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்றுமாறு கலைஞரிடம் ஸ்டாலின் கூறிய சம்பவத்தை நாடாளுமன்றத்தில் தாம் பதிவு செய்தபோது, அதைக் கேட்டுப் பிரியங்கா காந்தி கண்கள் கலங்கியதாகவும் அவர் தெரிவித்தார். இஸ்மாயில் மற்றும் சர்க்காரியா கமிஷன் அறிக்கைகளில் பதிவாகியுள்ள இந்த வரலாற்று உண்மைகளை சிலர் சுய அரசியலுக்காகத் திரித்துப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

 

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தோற்ற காலத்தில், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு அன்றைய முதலமைச்சர் கலைஞர் உடனடியாக அனுமதி அளித்து மரியாதை செய்ததை அரசியல் நாகரிகத்திற்குச் சிறந்த சான்றாக ஆ.ராசா சுட்டிக்காட்டினார். உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதவர்கள், தியாகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ளாமல் பேசுவதாகவும், அரசியலில் அடிப்படை நாகரிகமும் மனிதநேயமும் பேணப்பட வேண்டும் என்றும் தனது உரையில் அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.