உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 47 வயதான தொழிலதிபர் அமித் குமார் என்பவர், சனிக்கிழமை இரவு தனது கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். ஓம் சௌராஹா பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் நடுரோட்டில் வைத்து மது அருந்திக்கொண்டும், அதில் ஒருவன் பாதையிலேயே சிறுநீர் கழித்து கொண்டும் இருந்ததைக் கண்டுள்ளார்.
பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட அந்த கும்பலை அமித் குமார் தட்டிக்கேட்டு நியாயம் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் போதை கும்பல், அமித் குமாரைச் சூழ்ந்துகொண்டு செங்கற்களாலும் கைகளாலும் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த அமித் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 2 நாட்கள் உயிருக்குப் போராடிச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். “சாலையில் சண்டை போட்டு ஜெயிப்பதை விட, குடும்பத்திற்காகப் பத்திரமாக வீடு திரும்புவதே முக்கியம்; போதை ஆசாமிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்” என்ற விழிப்புணர்வு கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
