திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது தோட்டத்தில், பெருந்துறையைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் பல ஆண்டுகளாகத் தேங்காய் வெட்டும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் புதிதாக அங்குத் தேங்காய் வெட்டும் பணிக்காக வந்து சேர்ந்துள்ளார்.
இதனால், யார் அதிக வேலை செய்வது மற்றும் யார் தோட்ட உரிமையாளருக்கு நம்பிக்கைக்குரியவர் என்பது தொடர்பாக ரஞ்சித்துக்கம் முனியாண்டிக்கும் இடையே கடும் வாக்குவாதமும் போட்டோபோட்டியும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தோட்டத்தில் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு வெடிக்கவே, ஆத்திரமடைந்த ரஞ்சித் தான் வைத்திருந்த கூர்மையான தேங்காய் வெட்டும் அரிவாளால் முனியாண்டியின் கையை கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் முனியாண்டியின் கை மணிக்கட்டோடு துண்டாகி கீழே விழுந்தது.
கை துண்டான நிலையில் வலி தாங்க முடியாமல் அலறிய முனியாண்டி, கீழே கிடந்த தனது துண்டான கையைத் தானே ஒரு பிளாஸ்டிக் கவரில் எடுத்து வைத்துக்கொண்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், துண்டான கையை ஐஸ் பேக்கில் பத்திரமாக வைத்து மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மூலனூர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
