உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் இர்ஃபான் (எ) மோனு என்ற இளைஞர், சோனி யாதவ் மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னை கொடூரமாகத் தாக்கியதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் அளித்தும் போலிஸார் எவ்வித விசாரணையும் நடத்தாமல் அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும், புகார் மனுவை வாங்கிய போலிஸார் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சென்றும் அவருக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான இர்ஃபான், காவல் நிலைய வாசலிலேயே தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு அலறியுள்ளார்.
உடலில் தீ பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக ஓடிவந்து தீயை அணைத்து அவரை மீட்புப் பணிகள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது உயிருக்குப் போராடி வரும் இர்ஃபானின் நிலைமை குறித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலிஸாரின் அலட்சியமே இதற்குக் காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் நியாயமான விசாரணை கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
